நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 18 பவுன் நகையை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அக்ரஹாரம் கோட்டைக்காடு லட்சுமி நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவதன்று வளர்மதி அவரது தங்க நகைகளை சோப்பு தண்ணீரில் கழுவிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது முத்துவின் நண்பர்களான பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகிய இருவரும் முத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து நகைகளை கழுவிக் கொண்டிருந்த வளர்மதியிடம் பழனிச்சாமி எனது மாமனார் தங்க நகைகளுக்கு பாலீஷ் போடும் கெமிக்கல் வைத்துள்ளார் என்றும், தங்க நகைகளை நான் பாலிஷ் போட்டு தருகிறேன் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய வளர்மதி முதலில் ஒரு சங்கிலியை பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளார். அவரும் அந்த சங்கிலிக்கு பாலிஷ் போட்டுவிட்டு மீண்டும் வளர்மதியிடம் திருப்பி கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து பழனிச்சாமி வளர்மதியிடம் மீதமுள்ள நகைகளுக்கும் பாலிஷ் போட்டு தருவதாக கூறி 18 பவுன் நகைகளை வாங்கி கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நீண்ட நாள் ஆகியும் நகையை திருப்பி தராததால் வளர்மதி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்று நகைகளை கேட்டுள்ளார். அப்போது பழனிச்சாமியும், வெங்கடேசனும் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பழனிச்சாமி மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 பேரை கைது செய்து நகைகளை மீட்டுள்ளனர்.