கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் எம்பியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததற்காக மூன்றாவது நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு மானந்தவாடி காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையைத் திறந்து வைத்தார்.
அப்போது பேட்டியளித்த அவர் “காந்தியிடம் மிகப் பெரிய சக்தி எதுவென்றால் அவர் எதை நினைத்தாலும் அதை செய்து முடித்து விடுவார். இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருக்கவேண்டும் என்று அவர் சொன்னதுடன் மட்டுமல்லாமல் அதை நடத்திக் காட்டியுள்ளார். மேலும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறி அதை செயல்படுத்தியும் காட்டினார். மேலும் பெண்கள் வலிமையுடன் இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களோடு ராகுல்காந்தியின் மதிய உணவு அருந்தி, அவர்களோடு கலந்துரையாடினார்.