தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலியில் காணி பழங்குடியினருக்கு, வாழ்வியல் அங்காடியை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார்.
காணி பழங்குடியின மக்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும், காய்கறிகள், கிழங்கு வகைகள், பழங்கள், அவர்களின் வாழ்வியல் முறையில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. காணி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை உழவர் சந்தையில் சந்தைப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்பாடு செய்தார்.
இதற்காக ஒரு புதிய கடையை அவர் அமைத்துக் கொடுத்திருக்கிறார். கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தங்கள் உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்கும் என்று பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் காணி பழங்குடியினரின் உணவுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட இது கூடிய விரைவில் வரும் காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.