சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் 17 வயதுள்ள சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு மில்லில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென அந்த சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உடுமலை காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் மில்லில் சிறுமியுடன் சேர்ந்து வேலை பார்த்து வந்த விழுப்புரம் பகுதியில் வசிக்கும் ஈஸ்வர் என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுமி காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை போக்சோ வழக்காக மாற்றினர். அதன்பின் ஈஸ்வரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.