ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை ஜெர்மனி மக்களும் கொண்டாடி வருவது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவை கொண்டாடி வரும் நிலையில், 130 மக்கள் மட்டுமே வசித்து வரும் ஜெர்மானிய கிராமம் ஒன்றிலும் நீரஜ் சோப்ராவின் வெற்றி கொண்டாடப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுமார் 130 மக்கள் மட்டுமே வசித்து வரும் ஜெர்மனியின் குக்கிராமத்தில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் ஜெர்மன் நாட்டில் உள்ள ஒபெர்ஷ்லெட்டன்பாக் எனும் கிராமத்திலும் நீரஜ் சோப்ராவின் வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் நீரஜ் சோப்ரா-வின் வெற்றிக்கு பின்னணியில் இருக்கும் பயிற்சியாளரான டாக்டர் கிளாஸ் பார்டோனீட்ஸ் (73) அதே கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் தான். மேலும் பார்டோனீட்ஸ் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு தனது வீடு திரும்பிய போது பெரும்பாலான மக்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் பார்டோனீட்ஸ்-ன் பக்கத்து வீட்டினர் நீரஜ் சோப்ரா ஈட்டியை எரிந்த பிறகு அது சென்று விழுந்த இடம் தெரியாத நிலையிலும் வெற்றிக்கான சைகையை அவர் காட்டியது தங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு பயிற்சியாளர் டாக்டர் கிளாஸ் பார்டோனீட்ஸ்-ஐ பிற பயிற்சியாளர்களும், விளையாட்டு வீரர்களும் அழைப்பு விடுத்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் டாக்டர் கிளாஸ் பார்டோனீட்ஸ் ஒரே இரவில் எவ்வாறு விஷயங்கள் மாறுகின்றன என்பதை நினைத்தால் வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் ஜெர்மனியை சேர்ந்த Uwe Hohn இந்தியாவின் ஈட்டி எறிதல் விளையாட்டில் தலைமை பயிற்சியாளர். அவருக்கும் தனது சொந்த ஊரான ரெயின்ஸ்பெர்க்கில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் தலைசிறந்த ஈட்டி எறிபவரான ஹான் ஆரம்ப நாட்களில் இருந்தே நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவருடைய பயிற்சியின் உதவியுடன் மீரஜ் சோப்ரா காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் கோப்பைகளை வென்றுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் உவே ஹான் உலகிலேயே 100 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்த ஒரே வீரர் ஆவார்.