கடைக்கு சென்ற நபரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்ற சிறுவன் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மார்க்கெட் பகுதியில் ஜெபசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஜெபசிங்கை நிறுத்தி முகவரி கேட்பதுபோல் பேசியுள்ளனர். அப்போது திடீரென அந்த இளைஞர்கள் ஜெபசிங்கிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளனர்.
இதனையடுத்து ஜெபசிங் போட்ட சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த 2 இளைஞர்களையும் மடக்கி பிடித்துள்ளனர். மேலும் அவர்களை திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைதொடர்ந்து அவர்கள் இருவரும் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, தருமபுரி மாவட்டம் பொன்னாகரம் பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் என விசாரணையில் தெரியவந்த நிலையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.