இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும், ‘கோப்ரா ‘ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை கொல்கத்தாவில் துவங்க உள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. கே.ஜி.எஃப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 8 கெட்டப்புகளில் விக்ரம் நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பிரம்மித்தனர். இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.