மதிய உணவுத் திட்டத்திலும், ரேஷன் கடையிலும் பயறு வகைகள் வினியோகிக்கப்படும் என்று உழவர் நலத்துறை அமைச்சர் கூறியுள்ளார்..
தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.. அப்போது அவர் கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூபாய் 2,750 லிருந்து ரூபாய் 2,900 ஆக அதிகரிக்கப்படும்.. 2020 – 2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 42.50 வழங்கப்படும்..
வேளாண்மையின் பெருமையை இளம் சந்ததியினர் தெரிந்து கொள்ள சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.. உழவர் சந்தை கழிவுகளை உரமாக்கும் திட்டம் 25 உழவர் சந்தைகளில் ரூபாய் 2.75 கோடியில் செயல்படுத்தப்படும். காய்கறி கழிவு உரம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும்.
கடலூர் மாவட்டம் வடலூரில் ரூபாய் 1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் ரூபாய் 5 கோடி செலவில் பலாப்பழ சிறப்பு மையம் அமைக்கப்படும். மதிய உணவுத் திட்டத்திலும் ரேஷன் கடையிலும் பயறுவகைகள் வினியோகிக்கப்படும். துவரை, உளுந்து, பச்சைப்பயிறு போன்றவற்றை 61 ஆயிரம் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய திட்டம்.
கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரியில் ரூ 10 கோடியில் புதிதாக தோட்டக்கலைக் கல்லூரி அமைக்கப்படும். சென்னை கொளத்தூரில் விளை பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும் என்று கூறினார்..