கலெக்டர் ஸ்ரீதர் 6,487 விவசாயிகள் விண்ணப்பித்த சான்றிதழுக்கு 5015 நபர்களுக்கு மட்டுமே சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாரதப் பிரதமர் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய முறையில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு நடப்பாண்டில் இருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கிட கடந்த 28-ஆம் தேதி அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து சிறப்புமுகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சான்றிதழ் கேட்டு 6,487 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.
அதில் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த பிறகு இணையம் வழியாக பதிவேற்றம் செய்து சின்னசேலம் வட்டத்தில் 1,126 பேர், கள்ளக்குறிச்சி வட்டத்தில் 973 பேர், சங்கராபுரம் வட்டத்தில் 1,3 91 பேர், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 700 பேர், கல்வராயன் மலை வட்டத்தில் 273 பேர், திருக்கோவிலூர் வட்டத்தில் 552 பேர் என மொத்தமாக 5,015 விவசாயிகளுக்கு சிறு குறு விவசாய சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சரியான விவரம் மற்றும் ஆவணங்கள் இல்லாததால் 1,472 நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.