பருவ நிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் ஐபிசிசியின் இந்த அறிக்கையை, “மனிதகுலத்திற்கான கோட் ரெட் குறியீடு” என்று வர்ணித்துள்ளார். மேலும் உலகம் வேகமாக வெப்பமடைந்து வருகின்றது. உலகளாவிய வெப்பம் 2030ஆம் ஆண்டில் 1.5 திசையை எட்டும் பாதையில் உள்ளது. இது 2018இல் நாம் திட்டமிட்டதை விட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 1901-1971 க்கு இடையில் சராசரியாக ஆண்டுக்கு 1.3 மிமீ என்ற அளவில் கடல் மட்டம் உயர்ந்தது இருந்தது. இது 2006-2018 க்கு இடையில் 3.7 மிமீ/வருடம் என்ற அளவுக்கு கூடியுள்ளது. அதாவது இரண்டு மடங்கை விட வேகமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.
உலக சராசரி கடல் மட்டம் 1901 மற்றும் 2018 க்கு இடையில் 0.20 மீ அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 10 வருடங்களுக்கு ஒரு முறை மற்றும் 50 வருடங்களுக்கு ஒரு முறை கடுமையான வெப்பம், கனமழை மற்றும் வறட்சி நிகழ்வுகள் இனி, தீவிரமாக மாறும். அடுத்த ஒன்பது ஆண்டுகளில் அதாவது 2030-க்குள் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரும். இதனால் மனித குலம் பெரும் ஆபத்தை சந்திக்க உள்ளதாக ஐநா பருவநிலை மாற்றத்திற்கான குழு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, வரட்சி, பெரும் வெள்ளம், அனல் காற்று அடிக்கடி ஏற்படும். நிலைமை கைமீறி செல்வதால் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை தடுக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.