பஞ்சாப் மாநிலத்தில், பட்டப்பகலில் அகாலி தள கட்சியின் இளைஞரணி தலைவர் நடுரோட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்தவர் விக்ரம் ஜித் சிங். இவர் அகாலி தளம் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்தார். இந்நிலையில் அண்மையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் ஒன்றுக்கு சென்று வீடு திரும்புவதற்காக தனது காரில் ஏறியுள்ளார்.
கார் கதவைத் திறக்கும் போது, அருகில் இருந்து ஓடி வந்த முகமூடி அணிந்த இரண்டு பேர், அவர் முன் துப்பாக்கியை நீட்டி சுட முயன்றனர். உடனடியாக சுதாரித்து கொண்ட விக்ரம் ஜித் சிங், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அவர்கள் விடாமல் விரட்டி விரட்டி சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த விக்ரம் ஜித் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், அவர் உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரபல தாதாவான தேவிந்தர் பாபியா கோஷ்டி, பேஸ்புக் பக்கத்தில், அவரைக் கொன்றது நாங்கள் தான் என்று புகைப்படத்தை வெளியிட்டுத் தெரிவித்தது. மற்றொரு தாதா கோஷ்டியான லாரன்ஸ் பிஷ்னோய்-க்கு தகவல் கொடுப்பவராக விக்ரம் ஜித் சிங் செயல்பட்டதால் கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளது. விக்ரம் ஜித் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.