தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,விளையாட்டை முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்தது. மேலும் உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வர தடையில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்நிலையில் உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களை குறிப்பிட்டு, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்ற வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.அவரது ஆணைக்கிணங்க தமிழகத்தில் ரம்மி உள்ளிட்ட அனைத்து சூதாட்டங்களுக்கும் தடை விதிக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் லாட்டரி எக்காரணம் கொண்டு தடை நீக்கப்படாது. தடையை மீறி ஆன்லைனில் நம்பர் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.