தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதித்து அறிவித்தது.
இதற்கு முன்னதாக, மாவட்ட அளவில் அதிகமாக கூடக்கூடிய நிகழ்வுகள் மற்றும் சந்தைப்பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள் அல்லது காவல் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி பல்வேறு மாவட்ட நிர்வாகம் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.
இதனை தொடர்ந்து சென்னையில் ஆடி அமாவாசை என்பதால் கோயிலுக்குள் செல்வதற்கோ, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கோ சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு முதல் திருவான்மியூர், எலியட், மெரினா, அண்ணா சதுக்கம், திருவொற்றியூர், எண்ணூர் வரையிலான கடற்கரை, கோவில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை போலீசார் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கோவையில் உள்ள மால்கள் , பன்னடுக்கு வணிக வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் சாலை, நூறடி சாலை , காந்திபுரம் , ஒப்பணக்கார வீதி , ராமமூர்த்தி சாலை , சாரமேடு சாலை , ரைஸ்மில் சாலை , துடியலூர் சந்திப்பு ஆகிய மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள அத்தியாவசிய கடைகளான மருந்தகம் , காய்கறி கடைகளை தவிர பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் செயல்படும் 2 வாரசந்தைகளுக்கும் மறு உத்தரவு வரும்வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள் , ஜவுளி கடைகள் , நகைக் கடைகள் , வணிக வளாகங்கள் , சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது . மேலும் , மேற்படி வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தேநீர், ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்றும் கொல்லி மலைக்கு செல்லும் வெளியூர் நபர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,அனைத்து கடைகளும் காலை 6 முதல் மாலை 5 மணி வரையில் செயல்பட அனுமதியும் தேநீர் கடைகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கவும் அதன்பிறகு இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.