கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிக அளவு தொற்று பதிவாகி உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகள், பேக்கரி போன்றவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் காந்திபுரம் 5,6,7 வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்பி இட்டேரி சாலை, எல்லை தோட்டம் சந்திப்பு ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.