தமிழகத்தில் திருநங்கை என்பதற்கு இனி மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்றும், திருநங்கை என்பதற்கான சுய அறிவிப்பு போதும் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கை அல்லது திருநம்பி என்பதற்கு அரசு பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பெற்று அதை மாவட்ட சமூக நலத்துறையிடம் ஒப்படைத்து அடையாள அட்டை பெற வேண்டும். இதில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு இன்னல்களை திருநங்கைகள் சந்தித்து வந்தனர். இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு திருநங்கைகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி சம்மந்தப்பட்ட நபர் திருநங்கை அல்லது திருநம்பி என்பதற்கான சுய அறிவிப்பு கொடுத்து, அரசு மனநல மருத்துவரிடம் மட்டும் சான்றிதழ் பெற்று வந்தால் போதும். திருநங்கை அல்லது திருநம்பியாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் பதிவு செய்து உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை திருநங்கைகள் வரவேற்றுள்ளனர்.