குழந்தையிடம் இருந்து தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கொண்டாநகரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தின் 3 வயது மகள் கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் தங்க சங்கிலி திடீரென காணாமல் போனதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அந்த விசாரணையில் திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது திருநெல்வேலியில் வசிக்கும் சகாய நெல்சன் ராஜா மற்றும் அவரது மனைவியான ராஜேஸ்வரி ஆகியோர் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை திருடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சகாய நெல்சன் ராஜா மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.