திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு சோதனை நடத்தினர். இதன் பிறகு மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் உள்ள பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களின் அறைகள் உட்பட 3 அறைகளில் 3 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர் .
மேலும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் ,ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறும்போது,” ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் பெறப்படுவதாக தகவல் கிடைத்தது . இந்த தகவலின் பேரில் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது .ஆனால் இந்த சோதனையில் பணம் எதுவும் கிடைக்கவில்லை”, என்று அவர் கூறினார். இதற்கிடையே மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.