பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில், ‘நான் ஈ’, ‘புலி’ ‘முடிஞ்ச இவனப்புடி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது ‘விக்ராந்த் ரோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகிறது. இதில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் என்று தெரிகிறது.
நடிகர் சுதீப், தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஏழைகளுக்கும் தொடர்ந்து உதவி வருகிறார். இப்போது தனது சொந்த ஊரான ஷிவமோகாவில், 133 வருட பழமையான பள்ளியைத் தத்தெடுத்துள்ளார்.
அங்குள்ள அரசு கன்னட தொடக்கப்பள்ளி சிதிலமடைந்து காணப்படுகிறது. இதுபற்றி செய்தி வெளியானதும் அதை நடிகர் சுதீப் தத்தெடுத்துள்ளார். அந்தப் பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்கவும் அங்கு நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அவர் முடிவு செய்துள் ளார். இந்தப் பள்ளியை தத்தெடுத்த நடிகர் சுதீப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.