காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நாறாத்து இரண்டாம் மைல் பகுதியை சேர்ந்த மானசா என்பவர் கொச்சி கோதைமங்கலம் தனியார் பல் மருத்துவமனையில் படித்து வருகிறார். இவருக்கும் கண்ணூரை சேர்ந்த ரகில் என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தன்னை காதலிக்குமாறு மனிஷாவை தொடர்ச்சியாக அவர் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரை காதலிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ரகில், மானசா தங்கியிருந்த விடுதிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த மாணவியை சுட்டது மட்டுமல்லாமல், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் உடனிருந்த மாணவிகள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு தலை காதல் விவகாரத்தில் மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.