திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிகாம் பட்டதாரியான திருநங்கை தமிழகத்தின் இரண்டாவது எஸ்.ஐ யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் முதல் திருநங்கை எஸ் ஐ என்ற பெருமையை 2017 ஆம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி பெற்றார். இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையை சேர்ந்த திருநங்கை சிவன்யா இரண்டாவது எஸ் ஐ என்ற பெருமையைப் பெறுகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம்,தண்டராம்பட்டு அடுத்த பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவன்யா. இவரது பெற்றோர்கள் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது 31 வயதாகும் சிவன்யா பிகாம் பட்டதாரி ஆவார். திருவண்ணாமலையில் தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் படித்து தேர்வில் வெற்றிபெற்று முதல்வர் ஸ்டாலின் கையால் 26 ஆம் தேதி பணி ஆணையை பெற்றார். சிவன்யா திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் தன்னார்வலராக பணியாற்றி வந்தார்.
காவலர் தேர்வுக்காக அந்த பணியை விட்டுவிட்டு போட்டித் தேர்வுகளில் மிக கடுமையாக படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: “போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. மேலும் திருநங்கை என்பதால் அனைவரது கேலி, கிண்டல்களை புறம்தள்ளி தன்னுடைய முயற்சிக்கு கிடைத்த பலனாக இதை நான் பார்க்கிறேன் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.