தென் மாவட்டங்களில் இயற்கை, விவசாயம், தற்சார்பு விவசாயம் உள்ளிட்ட முன்னெடுப்புகளை எடுத்த முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி கோமதிநாயகம் காலமானார். திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள புளியங்குடியைச் சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் மட்டுமல்ல, முன்னோடி இயற்கை விவசாயியும் ஆவார். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் மரக்கன்று நட்டுப் அதனை பராமரிக்க வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல், வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளையும் கொடுத்தார்.
இன்று புளியங்குடி நகரெங்கும் தென்றல் காற்று வீசுகிறதென்றால், அதற்கு இவரின் தூண்டுதலே காரணம்.1975இல் விவசாய சேவா அமைப்பு என்ற அமைப்பைத் தொடங்கிய விவசாயிகளை சேர்த்து மண்வள மேம்பாடு, இயற்கை இடுபொருள் தயாரிப்பு, சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினார். இவரின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.