குத்தாலம் அருகே பச்சிளம் குழந்தை ஒன்று குளத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆணைமேலகரம் ஊராட்சி பகுதியில் உள்ள மல்லியம் கிராமத்தில் ரெயிலடி குளம் ஒன்று உள்ளது . இந்தக் குளத்தில் ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று பிணமாக மிதந்து கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குத்தாலம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குளத்தில் மிதந்து கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சிளம் ஆண் குழந்தையை குளத்தில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .