“இயற்கை எரிவாயு மற்றும் திரவ இயற்கை எரிவாயு மூலம் இயங்கக்கூடிய பேருந்துகளை இயக்கலாம்” என போக்குவரத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரயில்வே திட்டங்கள் மற்றும் விமான நிலைய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்தும், சுற்றுச்சூழல் மாசினை குறைத்திடும் வகையில், டீசலுக்கு பதிலாக மாற்று எரிசக்தி மூலம் அதாவது மின்கலன், இயற்கை எரிவாயு மற்றும் திரவ இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்குதல் குறித்தும், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டடங்களின் மேற்கூரைகளில் சோலார் மின் தகடுகளை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்தும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.