துனிசிய அதிபர் கயீஸ் நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி பதவி நீக்கம் செய்யப்படுவதாக பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி அந்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராத காரணத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அந்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் இளைஞர்களும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் போராட்டம் நடந்ததோடு இளைஞர்களால் அரசியல் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தை தேசிய அளவிலான பதற்றம் காரணமாக முடக்க முடிவு செய்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தை அரசியல் அமைப்பு சட்டப்படி கலைக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை எனவே நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்துள்ளதாக அதிபர் கயீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி பதவி நீக்கம் செய்யப்படுவதாகவும், விரைவில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் புதிதாக நியமிக்கப்படும் பிரதமர் கட்டுப்பாடுகளை தளர்த்தி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்துள்ளனர்.