மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மலை ஆரஞ்சு மற்றும் மாதுளை பழங்கள் பழுத்து தொங்குகின்றது.
விருதுநகர் மாவட்டம் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வண்ண காளான்கள் மற்றும் அழகிய வண்ண பூக்கள் பூத்து இருக்கின்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் அழகாக மலை ஆரஞ்சு பழங்களும், மாதுளை பழங்களும் அதிக அளவு பழுத்து தொங்குகின்றது. இந்தப் பழங்களை சாப்பிடுவதற்காக வெள்ளை மந்திகள், கரு மந்திகள் மற்றும் பெரும்பாலான பறவைகள் இந்தப் பகுதியில் முகாமிட்டு இருப்பதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியபோது வறட்சியான நேரங்களில் மலைப்பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் மாதுளை பழம் மிக குறைந்த அளவே சாகுபடியாகும். ஆனால் தற்போது பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக மலைப்பகுதியில் இந்த முறை அதிக அளவு பழங்கள் பழுத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே அடர்த்தியான வனப்பகுதியில் இத்தகைய பழங்கள் தொங்குவதால் இதனை வெளியாட்கள் யாரும் பறிக்க முடியாது. ஆகவே வனவிலங்குகள் சாப்பிடுவது போக பெரும்பாலான பழங்கள் கீழே விழுந்து கிடக்கும் என்று மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.