ராமநாதபுரம் மாவட்டம் கிராம பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள தில்லையேந்தல் ஊராட்சியில் மேலதில்லையேந்தல், கீழ தில்லையேந்தல், மோர்குளம், சின்னபாளையேந்தல், பிளாதோப்பு, மருதன்தோப்பு, முனீஸ்வரன் என பல்வேறு கிராமங்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த ஊராட்சியில் இருக்கும் கிராமங்களுக்கு முறையை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழக்கரை துணை மின்நிலையம் பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சிலர் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அப்பகுதிக்கு சென்று தண்ணீர் எடுக்க மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மருதன் தோப்பு சமூக ஆர்வலர் பூபதி தலைமையில் பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.