நாமக்கல் மாவட்டத்தில் பப்ஜி விளையாட்டால் அடிமையான மகனை பெற்றோர் கண்டித்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள சிறுநல்லிக்கோவில் எல்லுகாடு பகுதியில் செங்கோட்டையன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரதீஷ்(17) ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பிரதீஷ் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்த நிலையில் இவருக்கு சொந்தமாக புதிய செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் சிறுவனுக்கு பப்ஜி விளையாடுவது பொழுதுபோக்காக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து நாளடைவில் பிரதீஷ் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார்.
இதனால் சிறுவன் படிப்பில் கவனம் செலுத்தாமல் முழு நேரம் செல்போனின் விளையாடியுள்ளார். இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் பிரதீஷை படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த பெற்றோர் பதற்றமடைந்தது உடனடியாக அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பிரதீஷ் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஜோடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவன் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.