மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவனுக்கு கலெக்டர் நிதி உதவியை வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் சக்திவேல் முருகன்-முத்துரத்தினம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஹரி பிரசாத் என்ற மகன் இருக்கின்றான். இந்த மாணவன் சாலியர் மகாஜன பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றார். இவர் மதுரை கராத்தே பயிற்சி மையத்தில் கடந்த 9 வருடங்களாக பயிற்சி பெற்று வருகின்றார். இந்நிலையில் ஹரி பிரசாத் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். இதனால் தற்போது திருச்சி அண்ணா திடலில் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு கராத்தே சாம்பியன் 2021 போட்டியில் ஹரி பிரசாத் கலந்துகொள்ள இருக்கின்றார். இந்த மாணவனின் ஏழ்மையான குடும்ப நிலையை கருத்தில் கொண்டு கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையை அறிந்த கலெக்டர் மேகநாத ரெட்டி, தாசில்தார் மூலம் அந்த ஹரி பிரசாத் நிலையை ஆய்வு செய்து அறிக்கை பெற்றார்.
அதன் அடிப்படையில் மாணவன் கராத்தே போட்டியில் பங்கு கொள்வதற்காக 15 ஆயிரம் ரூபாய் காசோலையை கலெக்டர் வழங்கினார். மேலும் அந்த மாணவணிடம் கராத்தே பயிற்சிக்கு நேரம் ஒதுக்கினாலும், மீதமுள்ள நேரங்களை வீணடிக்காமல் திட்டமிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார். அதன்பின் அந்த மாணவன் உதவித்தொகை வழங்கியதற்கு கலெக்டருக்கு நன்றி தெரிவித்ததோடு தான் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வருவேன் என்று உறுதியளித்துள்ளார். அப்போது வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் அவருடன் இருந்தனர்.