பாகிஸ்தான் நாட்டின் தொலைத் தொடர்பு ஆணையம் ஐகோர்ட்டின் உத்தரவிற்கிணங்க செயல்படவில்லை என்று டிக் டாக் செயலிக்கு மீண்டும் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானிலிருக்கும் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள ஐகோர்ட் கடந்த மாதம் தனிநபர் டிக் டாக் செயலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்துள்ளது. அந்த விசாரணையின் முடிவில் ஐகோர்ட் டிக் டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட்டதால் பாகிஸ்தான் நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் அதனை தடை செய்துள்ளது.
இதற்கிடையே டிக்டாக் செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் ஓரின சேர்க்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகள் வருவதாக கூறி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்த செயலிக்கு மிகவும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சிந்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதனை விசாரணை செய்த நீதிபதிகள் தடையை நீக்குவதற்கு உத்தரவிட்டதோடு மட்டுமின்றி அதில் உள்ள ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்கும் படியும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் தொலைத் தொடர்பு ஆணையம் டிக் டாக் செயலி ஐகோர்ட் கூறியவாறு ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்கவில்லை என்று தற்போது டிக் டாக்கிற்கு மீண்டும் தடை விதித்துள்ளது.