செல்போன் கோபுரத்தை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரம் பர்மா காலனியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தனியார் செல்போன் நிறுவனத்தில் கடந்த வாரம் செல்போன் கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் அதற்குரிய பொருட்களான ஜெனரேட்டர் உள்ளிட்ட கருவிகளை நிறுவனத்தினர் கொண்டுவந்தனர். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் கஸ்பா மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது மக்கள் கூறியபோது இந்த பகுதியில் வயது மூத்தோர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதனால் செல்போன் கோபுரம் அமைப்பதன் மூலம் வெளிப்படும் கதிர் வீச்சுகளால் புற்றுநோய் பரவுவதற்கான அபாயம் இருக்கின்றது. எனவே கோபுரம் அமைக்க கூடாது என்று காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் காவல்துறையினர் செல்போன் கம்பெனி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்த பின் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.