கொரோனா நிவாரண நிதிக்காக தங்க நகையை ஆசிரியை கலெக்டரிடம் வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கவிதா என்ற ஆசிரியர் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்து வந்த நிலையில் விபத்தில் இறந்துவிட்டார். எனவே தவித்து வந்த கவிதாவுக்கு கணவரின் பெற்றோர் வீட்டில் இருந்தும் எந்த உதவியும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவரது மகன் மனிஷ் விஷ்வாவையும் பெற்றோர்கள் அழைத்து சென்றுவிட்டனர். எனவே தனக்கு ஆறுதலாக இருந்த மகனை கவிதா நீதிமன்றத்தின் மூலம் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து கவிதா தற்போது தனது பெற்றோருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் கவிதா முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது 3 1/2 பவுன் நகையை கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளார்.
இதனால் கவிதா தனது மகனுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரை சந்தித்து 3 1/2 பவுன் நகையை பெற்றுக்கொள்ளுமாறு கொடுத்துள்ளார். அப்போது கலெக்டர் மேகநாதரெட்டி மனிதநேயத்துடன் அவரது நிலையை விசாரித்து அறிந்து நகையை வாங்க மறுத்துவிட்டார். அதன்பின் கவிதா கலெக்டரிடம் தனது மகன் மனிஷ் விஷ்வாவை மெட்ரிக் பள்ளியில் படிப்பதற்கு வசதி இல்லை என்று தெரிவித்ததால் 25% இட ஒதுக்கீட்டில் ஆங்கிலப் பள்ளியில் பயில ஏற்பாடு செய்வதாக கலெக்டர் உறுதியளித்தார். மேலும் கலெக்டர் கவிதாவிற்கு சரியான வேலை வாய்ப்பு வரும்போது அதற்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மனிஷ் விஷ்வாவிற்கு கலெக்டர் திருக்குறள் புத்தகத்தை பரிசாக அளித்து நன்றாக படிக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார்.