பெட்ரோல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விழுந்ததில் 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவில் கிசுமு-புசுயி என்ற நெடுஞ்சாலை ஒன்று கென்யாவில் உள்ளது. அந்த சாலையில் டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில் எதிரே வந்த பால் வண்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியின் ஓட்டுநர் ஸ்டியரிங்கை திருப்பியுள்ளார். இதனால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அதிலிருந்த பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனைக் கண்ட மக்கள் அதை பிடிப்பதற்காக கையில் கேனுடன் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரி தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அங்கு பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் குழந்தைகள் உட்பட 11 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சரக்கு வாகன விபத்துகளினால் கென்யா நாட்டில் ஆண்டுக்கு 3000 பேர் இறப்பதாக கூறப்படுகிறது.