நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் போட்டித் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வை எழுதுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்காக நீட் தேர்வு விண்ணப்பம் நடைபெற்றது. ஆனால் தற்போது நீட் தேர்வை எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களை ஒருங்கிணைத்து தத்தமது பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களை நீட் தேர்வுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான பணிகள் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.