கோட்டை சுற்றுச் சுவரில் இருந்து மூதாட்டி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் கோட்டையின் முன்புறம் சுற்றுச்சுவரின் நடைபாதையில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது தற்கொலை செய்யும் நோக்கில் மூதாட்டி திடீரென சுற்றுச்சுவரில் இருந்து கீழே குதித்து விட்டார். அவர் அகழிக்குள் விழாமல் கோட்டை மதில் கீழ் சுவரில் உள்ள புதரில் விழுந்ததில் மூதாட்டிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வடக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தகவலின்படி தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியை கயிறு கட்டி மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட மூதாட்டியிடம் காவல்துறையினர் விசாரித்தபோது அவர் தனது முகவரிகளை தெரிவிக்க மறுத்துவிட்டார். அதன்பின் மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.