முன்விரோதம் காரணமாக 3 பேர் பெட்ரோலினால் மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சுருட்டுக்கார தெருவில் கலீல் என்பவர் கார் டிரைவராக வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிய பின் வீட்டிற்கு சென்றபோது தெருவில் தேங்கி கிடந்த சகதி தெறித்து அந்தப் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பயாஸ் என்பவருடைய முகத்தில் தெறித்து விட்டது. இதனால் கலீல் மற்றும் பயாஸ் அவருடைய நண்பர்கள் அப்ரோஸ், அப்துல்லா போன்றோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கலீல் திடீரென பயாஸை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இவ்வாறு முகத்தில் சகதியை அடித்துவிட்டு தட்டிக்கேட்ட தன்னையும் தாக்கிய கலீல் மீது பயாஸ் கோபத்தில் இருந்துள்ளார். அதன்பின் கலீல் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவருடைய வீட்டிற்கு சென்று விட்டார். அந்த வீட்டின் கீழ் பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் பணிபுரியும் நகீம் என்பவர் அவருடைய மோட்டார் சைக்கிளையும் கலீல் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார் . இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் பயாஸ், அப்ரோஸ், அப்துல்லா போன்றோர் கலீல் வீட்டிற்கு முன் வந்து அவரை வெளியே வரும்படி சத்தமிட்டுள்ளனர். இவர்கள் அவரின் மோட்டார் சைக்கிளை எரிக்கும் நோக்கத்தில் பெட்ரோல் பாட்டிலை வைத்திருந்தனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் கலீல் வீட்டைவிட்டு வெளியே வராததால் அவதூறான வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த கலீல் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக நகீமின் மோட்டார்சைக்கிளை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் மோட்டார்சைக்கிள் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதனைதொடர்ந்து பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதனை கலீல் வீட்டில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் சம்பவத்தில் ஈடுபட்ட பயாஸ், அப்ரோஸ், அப்துல்லா போன்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.