மக்களின் தேவைகளை அறிந்து அதனைப் பூர்த்தி செய்வதற்காக ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவும் ஒருங்கிணைந்து பல திட்டங்களை ஆப்பிரிக்க நாடுகளில் அமலுக்கு கொண்டு வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆப்பிரிக்கா-இந்தியா ஆசிய நாடுகளுக்கிடையிலான திட்ட ஒத்துழைப்பின் 16 வது மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொளி வாயிலாக பேசியுள்ளார். அதாவது இந்தியாவிற்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்குமிடையேயான உறவு நம்பகத் தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றுள்ளார்.
இதில் தங்கள் நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து அதனை ஆப்பிரிக்க நாடுகள் பூர்த்தி செய்ய நினைக்கும் போது அவர்களுடன் இந்தியாவும் இணைந்து திட்டத்திற்கேற்ப நிதி உதவியை அளித்து அங்கு பல திட்டங்களை செயல்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆப்பிரிக்காவிலுள்ள கடலோர நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்கு சிக்கல் ஏற்படும் விதமான நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள ஆப்பிரிக்க நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கான இந்திய நாட்டின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.