இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததால் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு அறிவித்தது. எனினும் ஜூலை மாதம் முதல் முழு அகவிலைப்படி நிலுவைப் பணம் அனைத்தும் கிடைக்கும் என்று நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் கூறியிருந்தார்.
ஆனால் ஜூலை மாதம் வந்துவிட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கவில்லை. எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியது. இத்தகவல் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களையும், 65 லட்சம் பென்சனர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் ஆகஸ்ட் மாதம் முதல் அகவிலைப்படியின் முழுப் பயனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. தற்போதைய நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதமாக இருக்கிறது. இது 28 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே செப்டம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும். கிளாஸ் 1 அலுவலர்களுக்கு சம்பள உயர்வு ரூ.11,880 முதல் ரூ.37,554 வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல பல்வேறு பிரிவுகளில் ஊதிய உயர்வு குறிப்பிடும்படியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.