கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள திருவெங்கனூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் சைக்கிளில் முடிகொண்டான் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சுரேஷிடம் வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் புலித்தேவன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 7000 ரூபாய் பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சுரேஷ் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புலித்தேவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் புலித்தேவன் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாலும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாலும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி புலித்தேவனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.