15 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமியிடம் சுரேஷ் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனையறிந்த அந்த சிறுமியின் உறவினர்கள் நெல்லை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் சுரேசை கைது செய்துள்ளனர். இதனையடுத்து நள்ளிரவில் சிறுமியின் உறவினர்கள் இந்த சம்பவத்தில் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதால் அவரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.