கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும்.
மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த நிலையில் தமிழக அமைச்சர்கள் இதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து பேசினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலம் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஒன்றிய அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம் விரைவில் மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.