ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33- வது வார்டில் சுந்தரி ராஜா தெரு, ராமசாமி கோவில் தெரு போன்ற பகுதிகளில் குடிநீர் சரியாக வராத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தென்காசி சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி தண்ணீர் திறப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது நீர் தேக்கத் தொட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தண்ணீரை நிறுத்தியதாகவும், மேலும் தொட்டியில் குடிநீர் நிரப்பப்பட்டு வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்த பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.