மதுரையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பிளக்ஸ் பேனர் வைத்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து பேனர் வைக்க வேண்டாம் என தமிழக அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக வேலூர் ஆட்சியர் பேனர் வைத்தால் ஓராண்டு சிறை என எச்சரித்தார். மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கட் அவுட், பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பிளக்ஸ் பேனர் வைத்ததாக குருசீலன், கண்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.