1 1/2 வயது ஆண் குழந்தையை ஒருவர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயதில் கபிலேஷ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கனிமொழியை தனது குழந்தையுடன் ஆறுமுகம் அடிக்கடி தனது மாமியார் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் குழந்தை கபிலேஷ் திடீரென கதறும் சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்டதும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி எழுந்து பார்த்த போது குழந்தை கபிலேஷ் ரத்த காயத்துடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிம்பா என்ற மோப்ப நாய் உதவியோடு கொலையாளியை தேடியுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது கனிமொழியின் அக்காள் கணவரான பிரசாந்த் என்பவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கனிமொழிக்கும், பிரசாந்துக்கும் இடையே செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்ட போது கனிமொழியின் தாயார் லட்சுமி தனது மகளுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பிரசாந்த் கனிமொழியை கொலை செய்ய திட்டமிட்டு ஒரு கல்லை இரவு நேரத்தில் எடுத்து வந்துள்ளார். ஆனால் பிரசாந்த்தின் கையில் இருந்த கல் எதிர்பாராதவிதமாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மீது விழுந்து கபிலேஷ் உயிரிழந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.