எத்தியோப்பியாவில் நடந்த பொதுத்தேர்தலில் அபி அகமது அவர்கள் மீண்டும் வெற்றிப்பெற்று பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
எத்தியோப்பியா நாட்டில் உள்ள டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கு இடையேயான உள்நாட்டுப் போர் கடந்த மாதம் தீவிரமடைந்தது. இதில் டிக்ரே மாகாணத்தின் மிகேலி நகரை கிளர்ச்சியாளர்கள் கைவசப்படுத்தியதில் இருதரப்புக்கும் மோதல் வலுப்பெற்றது. இதனால் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அந்த மாகாணத்தில் பஞ்சத்தில் தவிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இதனை அடுத்து எத்தியோப்பியா நாட்டில் கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலானது கடந்த மாதம் ஜூன் 21 ஆம் தேதி அன்று போர் மற்றும் கொரோனா அச்சத்திற்க்கு இடையே நடைபெற்றது.
இந்தப் பொதுத் தேர்தலில் அம்ஹாரா தேசிய இயக்கம் மற்றும் எத்தியோப்பியாவின் பிரதமரான அபி அகமது அவர்களின் செழிக்கும் கட்சிக்கும் நடுவில் போட்டி ஏற்பட்டது. இதில் பிரதமர் அபி அகமது அவர்கள் 436 இடங்களில் 410 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் இரண்டாவது முறையாக எத்தியோப்பியாவில் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். மேலும் இவர் நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.