திருவாரூரில் கோடை அறுவடை செய்யும் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
திருவாரூர் மாவட்டத்தில் நெல் உற்பத்தி முதல் இடத்தை பிடித்து வருகின்றது. இந்த பகுதியில் மற்ற பயிர்களை விட நெல் உற்பத்தி ஏற்ற மண் வளமாக இருக்கின்றது. இதில் பல இடங்களில் ஆற்றுப் பாசனத்தை எதிர்பார்த்து விவசாயம் நடந்து வருகின்றது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய தண்ணீர் இருந்து வருவதால் உரிய காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி முழுமையாக நடைபெற்று வருகின்றது.
இதனையடுத்து ஏராளமான விவசாயிகள் சம்பா அறுவடை முடிந்தபின் குறைவான தண்ணீரில் போதிய மகசூல் கிடைக்கும் பணப் பயிர்களான பச்சைப் பயிர், உளுந்து மற்றும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோடை சாகுபடி என்பது நிலத்தடி நீரினை எதிர்பார்த்து மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால் குறைவான பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு 8 ஆயிரத்து 725 ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடியில் விவசாயிகள் மேற்கொண்டனர்.
இதில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இடத்தை கணக்கில்கொண்டு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோடை அறுவடை பணிகள் இதுவரை 7 ஆயிரத்து 109 ஏக்கர் பரப்பில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும் 20 சதவீதம் பணிகள் சில நாட்களுக்கு நிறைவு பெறும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.