பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணி துவங்கப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது.
செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கொடுக்கப்பட்டு வருவதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் புகாரை ஏற்றுக்கொண்டு பழவேலி பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு அதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அரசு நிதியிலிருந்து 1 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பூமிபூஜை நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செல்வம் எம்.பி. வரலட்சுமி மதுசூதனன் போன்றோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும் இதில் தி.மு.க. நகர செயலாளர் நரேந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் அன்புச்செல்வன் போன்ற பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இவ்வாறு இந்த திட்ட பணிகள் நிறைவு பெற்றால் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.