வில்வ இலை சிவபெருமானின் தலவிருட்சம் என்று அழைக்கப்படுகிறது. வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தை கொண்டுள்ளது. இது இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக சொல்லப்படுகின்றது. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உண்டு. சூரிய உதயத்திற்கு முன்னதாகவே மரத்திலிருந்து வில்வ இலைகளை பறித்து பூஜைக்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது.
இதற்கு நிர்மால்யம் கிடையாது என்பதால் சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு நாம் இறைவனுக்கு பூஜை செய்யலாம். தினமும் சிவனுக்கு வில்வம் சாத்தி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. அதுவும் மகா சிவராத்திரி நாளில், பிரதோஷ நாட்களில் வில்வம் கொண்டு சிவனுக்கு பூஜை செய்தால் ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகும் என்று கூறுவார்கள். பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து விட்டு பின்னர் பயன்படுத்த வேண்டும்.