இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய சீரம் நிறுவனம் அனுமதி கோரி இருந்த நிலையில், அதற்கு டிசிஜிஐ ஒப்புதல் வழங்கியது. இந்தியாவில் உள்ள இரு தடுப்பூசிகளுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்புட்னிக் வி 91.6%அதிக திறன் வாய்ந்தது.
இந்நிலையில் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை காவேரி மருத்துவமனையில் துவங்கியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையை தொடர்ந்து தற்பொழுது காவேரி மருத்துவமனையில் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுமார் 80 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி டெல்டா வகைக்கு எதிராக 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.