புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளி ஒருவர் கால் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதியதாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த குமாரி என்ற பெண் கட்டிட வேலை செய்து வந்துள்ளார் . இந்த கட்டிட பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது 2-வது மாடிக்கு சென்று குமாரி கால் தவறி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உயிரிழந்த குமாரின் கணவர் முனுசாமி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் இவர் தனது 2 பெண் குழந்தைகள் சுமித்ரா, சுஜிதா இருவரையும் தொழிலாளி குமாரி தனியாக வளர்த்து வந்துள்ளார். இதனால் பெற்றோரை இழந்த 2 பெண் குழந்தைகள் நிலையை கண்டு அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.