முன்விரோதம் காரணமாக இரண்டு வாலிபர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஊத்துமலை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயக்குமாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருள்முருகன் என்பவருக்கும் இடையே நில பிரச்சனையால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் முருகன் என்பவர் ஜெயக்குமாரின் நிலத்தில் இருந்த செடியை வெட்டியதால் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த ஜெயக்குமாரின் நண்பரான திலீப் என்பவர் அவர்களுக்கு இடையே நடக்கும் தகராறை தடுக்க முயற்சி செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அருள்முருகன் மற்றும் அவரின் அண்ணனான லிங்குசாமி என்பவருடன் இணைந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெயக்குமார் மற்றும் திலீப்பை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதில் ஜெயக்குமார் மற்றும் திலீப் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து கீழே விழுந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த ஜெயக்குமாரின் மனைவி அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்களின் உதவியோடு அவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஜெயக்குமாரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயக்குமார் மற்றும் திலீப்பை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற அருள்முருகன் மற்றும் லிங்குசாமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.